கயிலாயத்திலிருந்து தென்கோடி பகுதிக்கு வந்த அகத்திய முனிவர், சிவபெருமான் திருமணக் காட்சியை காண வேண்டி வழிபட்ட தலம். அதனால் இப்பெயர் பெற்றது.
இத்தலத்து மூலவர் 'அகஸ்தீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், உயர்ந்த பாணத்துடன், பெரிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'பாகம் பிரியாள் நாயகி' என்னும் திருநாமத்துடன், சிறிய வடிவில் காட்சி தருகின்றாள்.
பிரகாரத்தில் அகஸ்திய முனிவருக்கு தனி சன்னதி உள்ளது. சனி பகவான், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், பைரவர், சாஸ்தா ஆகியோர் சன்னதிகளும் உள்ளன.
இராமபிரான் இங்கு வந்து இலங்கையை பார்வையிட்டார் என்று கூறப்படுகிறது. அதற்கு அடையாளமாக இத்தலத்தில் இருந்து கோடிக்குழகர் கோயில் செல்லும் வழியில் சுமார் 4.5 கி.மீ. தொலைவில் இடதுபக்கம் 'இராமர் பாதம்' என்னும் இடம் உள்ளது.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|